தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆலோசனை நடத்தினார். அவர் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் உடல் நிலையைஅவ்வப்போது கண்காணித்து ஆலோசனைகள் வழங்கிட பணியாளர்களை சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சி துறையினர் மாவட்டத்தில் உள்ள 88 அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு, கிருமி நாசினி தெளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களை சுத்தம் செய்திடவும், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யவும், போக்குவரத்து வசதிகள், குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி ஏற்படுத்துதல், பழுதடைந்த கட்டிடங்களை சரிசெய்தல் முதலான ஆயத்தப்பணிகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குப் புதிதாக படுக்கைவசதி ஏற்படுத்தித்தர வேண்டும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்தல், 3 வேளை (காலை, மதியம், மாலை) கைகளை சுத்தம் செய்தல், தடுப்புகள் பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே வரவும், வெளியே செல்லவும் வசதி செய்தல், தொற்று பாதித்த நபர்களை பள்ளிக்கு வராமல் வீட்டிலிருக்கச் செய்யதல் போன்றவற்றை முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
உடல் வெப்பநிலை அறியும் கருவி மற்றும் ஆக்சிமீட்டர்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். பள்ளி தொடங்கும் முன்னர் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் நடத்தி பள்ளிகள் திறப்புக்கான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
இதுவரை தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் வே.சரவணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் போஸ்கோ ராஜா, பொற்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபானி, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சசிரேகா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago