வடாற்காடு மாவட்டத்தில் - கட்டணம் குறைப்புடன் 40 திரைகளில் படங்கள் வெளியீடு : தினசரி 3 அல்லது 4 காட்சிகள் திரையிட நடவடிக்கை

By செய்திப்பிரிவு

வேலூர், தி.மலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய வடாற்காடு மாவட்டத்தில் 40 திரையரங்குகளில் நேற்று படங்கள் வெளியிடப்பட்டன. புதிய தமிழ் படங்கள் இல்லாத நிலையில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர் வில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் கரோனா விதிகளை கடைபிடித்து திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. திரையரங்கில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி, திரையரங்க பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், 4 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட உள்ளதால் பராமரிப்பு பணிகளை முடித்த பிறகே திரையரங்கை திறக்க உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அரசு அனுமதி அளித்தும் கடந்த 23-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய வடாற்காடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் 26 மற்றும் 27-ம் தேதிகளில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வடாற்காடு மாவட்டத்தில் உள்ள சுமார் 60 திரையரங்கில் இருக்கும் 89 திரைகளில் (ஸ்கிரீன்ஸ்) 40 திரைகளில் நேற்று படங்கள் வெளியிடப்பட்டன.

இதில், ஹாலிவுட் திகில் திரைப் படமாக ‘காஞ்சுரிங்-3’, டோனி ஜா நடிப்பில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆக் ஷன் படமான ‘வீராதி வீரன்’, பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரின் ‘பெல் பாட்டம்’ படம் வெளியாகியுள்ளன. முதல் நாள் என்பதால் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் படம் பார்க்க வந்தனர். ரசிகர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பிறகே சமூக இடைவெளியுடன் அமர்ந்து படத்தைப் பார்க்கவும் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக வடாற்காடு மாவட்ட திரையரங்க உரிமையாளர் கள் சங்க தலைவர் ‘எஸ்’ பிக்சர்ஸ் சீனிவாசன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘வடாற்காடு மாவட்டத்தில் சுமார் 60 சதவீதம் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரங்களில் மீதமுள்ள திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. தமிழில் புதிய படங்கள் எதுவும் இல்லாத நிலையில் ஹாலிவுட் படங்கள் மட்டும் இருக்கிறது.

புதிய தமிழ் படங்கள் இல்லாத நிலையில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.120 என்பதை ரூ.100 ஆக குறைத்துள்ளோம். குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.80-ஆக உள்ளது. இரவு 10 மணி வரை திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்துள்ளதால் தினசரி 3 முதல் 4 காட்சிகள் என நேரத்துக்கு ஏற்ப படங்கள் திரையிட ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்