பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தி.மலை அறிவொளி பூங்கா முன்பு ‘ஊர்கள் தோறும் மக்கள் நாடாளுமன்றம்’ என்ற தலைப்பில் அறவழி போராட்டம் நேற்று நடைபெற்றது.
விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள், ரயில், வங்கி, காப்பீடு மற்றும் ராணுவ தொழிற்சாலைகளை தனியாருக்கு வழங்குதல், நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி முறையீடுகளை ஏற்க மறுத்து விவாதம் இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றி ஜனநாய கத்தில் குரல்வளையை நசுக்குதல் உள்ளிட்டவற்றை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘ஊர்கள் தோறும் மக்கள் நாடாளுமன்றம்’ என்ற அறவழி போராட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அறிவொளி பூங்கா முன்பு நேற்று நடைபெற்ற போராட்டத்துக்கு வட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஞானவேல் முன்னிலை வகித்தார். தேசிய கொடியை ஏற்றி வைத்து மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார்.
முன்னதாக, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் முத்தையன், மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜோதி, அரசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago