நிதி நெருக்கடியில் செங்கை, காஞ்சி மாவட்ட நூலகத் துறை - - உள்ளாட்சி அமைப்புகள் ரூ.54 கோடி வரி பாக்கி :

சென்னை மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட செங்கை, காஞ்சி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் நூலகத் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.54 கோடி நூலக வரியை வழங்காமல் இழுத்தடித்து வருவதால், நூலகத் துறை நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வசூலிக்கும்போது நூலக வரியும் சேர்த்து வசூலிக்கின்றன. ஒரு ரூபாய்க்கு 5 பைசா என்றிருந்த நூலக வரி, 1992-ம் ஆண்டு 10 பைசாவாக உயர்த்தப்பட்டது. நூலக வரியாக வசூலிக்கப்படும் தொகையை உள்ளாட்சி அமைப்புகள் நூலகங்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட மைய நூலகத்துக்கு சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம், பல்லாவரம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் ரூ.54,27,10,353 கோடி நூலக வரி பாக்கி வைத்துள்ளன.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிளை நூலகங்கள், கிராமப்புற நூலகங்கள் என மொத்தம் 170 நூலகங்கள் உள்ளன. 146 நிரந்தர பணியாளர்கள், 40 தற்காலிகபணியாளர்கள் பணியாற்றுகின்றனர். நூலக வரியை செலுத்தாததால் நூலகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. புதிய புத்தகங்களை வாங்க முடிவதில்லை. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடிவதில்லை. இந்த நிதியைக் கொண்டே நூலகத் துறையின் ஒட்டு மொத்த செலவினங்களும் சமாளிக்கப்படுகின்றன.

உள்ளாட்சி அமைப்புகள் மாதந்தோறும் சொத்துவரியை வசூலிக்கும்போதே நூலகத் துறைக்கு, நூலக நிதியை வழங்கிவிட வேண்டும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் இந்த நூலக நிதியை உடனுக்குடன் வழங்காமல் இழுத்தடித்து வழங்குகின்றன.

இதுகுறித்து நூலகத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "நூலகத் துறைக்கு உள்ளாட்சி அமைப்புகள் 2020- 21-ம் ஆண்டுக்கு ரூ.54 கோடி வரி பாக்கி வைத்துள்ளன. இந்த வரியை செலுத்த பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் கண்டுகொள்ளவே இல்லை.

நூலகத்துக்கு என வழங்கப்படும் நிதி தனியாக ஒரு கணக்கில் செலுத்தப்பட்டு பின்னர் எங்களுக்கு காசோலையாக வழங்கப்படும். இதில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு தான் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்