ஆசிரியர் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பள்ளி திறக்கப்படாது : விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கையால் சர்ச்சை

By செய்திப்பிரிவு

ஆசிரியர் தடுப்பூசி செலுத்தா விட்டால் பள்ளி திறக்கப்படாது என்ற விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கையால் ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

செப்.1-ம் தேதியிலிருந்து 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் 19,950 ஆசிரியர்களில் 10,461 ஆசிரியர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி நேற்று முன்தினம் மாலை ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், "ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும், அப்பள்ளி திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இது ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக பள்ளி திறக்கப்படாது என்பதை எவ்வாறு ஏற்க முடியும் என கேள்வி எழுந்தது. அதையடுத்து, மீண்டும் நேற்று காலை இச்சுற்றறிக்கையில் மாற்றம் செய்து அனுப்பப்பட்டது. அதில், "பள்ளி திறக்கப்படாது" என்ற வரிகள் மட்டும் நீக்கப்பட்டு, அனைத்து ஆசிரியர்களையும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்