விபத்து, குற்றச்செயல்களை தடுக்க - மேலுமலை வனப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் :

By செய்திப்பிரிவு

மேலுமலை வனப்பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது.

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை வனப்பகுதி உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் இவ்விடம் மேடாக உள்ளதால் மிதமான வேகத்தில் செல்லும்.இதனால் ஓசூர், பெங்களூரு மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு தொழிற்சாலைகளுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வழிமறித்து கடத்திச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதேபோல் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிநோக்கி வரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதால், விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் மேலுமலை வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்க எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி உத்தர விட்டார்.அதன்படி சூளகிரி காவல் நிலைய எல்லை தொடங்கும் இப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை இன்ஸ்பெக்டர் மனோகரன் நேற்று தொடங்கி வைத்தார். இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, இங்கு 24 மணி நேரம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதன் மூலம் மேலுமலை வனத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பங்களை தடுக்கலாம், அதிவேகமாக வரும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்