கூட்டுறவு வங்கிகளில் கூட்டு பட்டா உள்ள விவசாய நிலங்களில் பாசனம் செய்ய பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறை தீர்வுக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், மாதனூர், வாணியம் பாடி, நாட்றாம்பள்ளி, கந்திலி ஆகியஇடங்களில் உள்ள வேளாண் விரி வாக்க மையங்களில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத் தில், 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இதனை, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தனது அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
விவசாயி: கந்திலி அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள மின்மாற்றி அடிக்கடி பழுதாகிவிடுகிறது. இதனால், மின்சாரம் தடைப்பட்டு வருவதால் விவசாயப்பணிகள் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் மின்சாரம் இன்றி கிராமமே இருளில் மூழ்கி விடுகிறது. இதைத் தடுக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர் : நத்தம் கிராமத்தில் புதிதாக சப்-ஸ்டேஷன் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. விரைவில், அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
விவசாயி: தென்னங்கன்று களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர்: அதற்கான சாத்தி யக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்.
விவசாயி: விவசாய நிலங்களில் வன விலங்குகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பிற மாநிலங்களில் விவசாய பயிர்களை சேதம் செய் யும் காட்டுப்பன்றிகளை சுட அனுமதியுள்ளது. அதைப்போலவே பயிர்களை சேதம் செய்யும் காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர்: தமிழகத்தில் வன விலங்குகளை கொல்ல அனுமதியில்லை. வன விலங்குகள் விவசாய நிலத்துக்குள் நுழை யாமல் தடுக்க ஏற்பாடு செய்யலாம்.
விவசாயி: திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து தடுப்பணைகளையும் சீரமைக்க வேண்டும். பல இடங்களில் தடுப்பணைகள் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, நீர்வரத்துக் கால்வாயை தூர்வார வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆட்சியர் : ஆய்வு செய்து தடுப்பணைகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நீர்வரத்துக் கால்வாய் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளாட்சித் துறையினருக்கு ஏற்்கெனவே உத்தரவிடப்பட் டுள்ளது. விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: கூட்டுறவு வங்கிகளில் கூட்டு பட்டா உள்ளவர்களுக்கு பயிர்க்கடன் வழங்குவது இல்லை. கூட்டு பட்டாவில் உள்ள உறுப்பினர்களிடம் தடையில்லா சான்று வாங்கி வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அளிக்கின்றனர். இதை எளிமைப்படுத்தி கூட்டு பட்டா உள்ள விவசாய நிலங்களுக்கும் பயிர்க் கடன் வழங்க வேண்டும்.
ஆட்சியர்: கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: குரிசிலாப்பட்டு பகுதியில் மயானப்பகுதி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆட்சியர்: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சீனிவாசன், கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் முனிராஜ், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் நாசர், வனச்சரக அலுவலர் பிரபு, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago