அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது - தி.மலையில் போலி மருத்துவர் தப்பியோட்டம் :

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை கிராமத்தில் மருந்துக் கடை ஒன்று செயல்படுகிறது.

அங்கு, போலி மருத்துவர் ஒருவர் ரகசியமாக கிளீனிக் நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி தலைமையிலான குழுவினர் அந்த குறிப்பிட்ட மருந்து கடையில் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, மருந்து கடையின் பக்கவாட்டில் வழியை ஏற்படுத்தி அங்கு படுக்கை வசதியுடன் கூடிய கிளீனிக் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு, 5-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக காத்திருப்பதும் அதிகாரிகளைப் பார்த்ததும், அங்கிருந்த போலி மருத்துவர் மருந்து கடையின் வழியாக தப்பியோடியதும் தெரியவந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அங்கு கிளீனிக் நடத்தி வருவது உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்து ஏராளமான ஆங்கில மருந்து, மாத்திரைகளுடன், ஆக்சி பல்ஸ் மீட்டர்கள், மூச்சுத்திணறல் சிகிச்சைக்கு பயன்படும் நெபுலைசர்கள், சிரஞ்சி, ஊசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தி.மலை கிராமிய காவல் நிலையத்தில் இணை இயக்குநர் கண்ணகி அளித்த புகாரின்பேரில் போலி மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். அந்த மருந்து கடையின் உரிமையாளர் மற்றும் யார் பெயரில் உரிமம் உள்ளது என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE