கரோனா பரவலை தடுக்கும் வகையில், நடப்பு மாதத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.வினீத் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் விவசாயிகள் பேசியதாவது: உப்பாறு அணைக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் உயிர் தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். காங்கயம் வட்டம் வெள்ளகோவில் பிஏபி 1, 3-ம் மண்டல பாசனப் பரப்பில், 48 ஆயிரம் ஏக்கர் பயன் பெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 1993 விதிகளின் படி 7 நாள் அடைப்பு, 7 நாள் திறப்புஎன்ற முறையில் பாசனம் பெற்று வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கடைமடை பாசனத்துக்குசரிவர தண்ணீர் விடுவது கிடையாது. தலைமடை பகுதியில் 100-க்கும்மேற்பட்ட தென்னை மட்டை தொழிற்சாலைக்கு, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் திருடப்படுகிறது.
அதேபோல, பிஎம்சி (பரம்பிக்ளம் பிரதான கால்வாய்) வாய்க்கால் அருகே ஒவ்வொரு விவசாயியும் 2 கோடி, 3 கோடி லிட்டர் தண்ணீர் குளங்களை வெட்டி, பாலித்தின்கவரை போட்டு தேக்கி வைத்துக்கொள்கின்றனர். இதனால் பிஏபி கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், கடைமடை விவசாயிகளையும் அமர்த்தி பேச்சுவார்த்தை நடத்தி, தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்குழாய் கிணறு அமைக்க, தண்ணீர் பார்க்க திருப்பூர் மாவட்டத்துக்கு நீரூற்று நிபுணரை நியமிக்கவேண்டும். மங்கலம் கால்நடை மருந்தகம் அருகே உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், தங்கள்கால்நடைகளை மருத்துவ சிகிச் சைக்காக கொண்டு வருகிறார்கள்.தினசரி 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. ஆனால், ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். பராமரிப்பு உதவியாளர் யாரும் இல்லை. ஆகவே, பராமரிப்பு ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் தெற்கு வட்டத்திலுள்ள ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம் ஆகிய கிராமங்களை அருகாமையில் உள்ள வடக்கு வட்டத்தில் சேர்க்க வேண்டும். தெற்கு வட்டத்தில் சேர்த்த நாள் முதல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதியும் இல்லை. ஆகவே 7 கிராமங்களை வடக்கு வட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நேரில் நடத்துவதுடன், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தையும் நடத்த வேண்டும்.
அவிநாசி பகுதியில் யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும். விவசாயிகளின் குற்றச்சாட்டு, புகார்களுக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
வேளாண்மை விரிவாக்க மையம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் இருந்து, காணொலிக் காட்சி வாயிலாக தங்கள் குறைகளை ஆட்சியரிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.
புறக்கணிப்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், துணை நிர்வாகி எஸ்.கே.கொழந்தசாமி உள்ளிட்டோர், ஊத்துக்குளியில் இருந்து காணொலி காட்சி வழியாக குறைதீர் கூட்டத்தில்பங்கேற்றனர். திட்டமிட்ட நேரத்தில்கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்கவில்லை. இதையடுத்து காலை 11.30மணிக்கு கூட்டம் தொடங்கப்பட்டது.அதிலும் ஆட்சியர் பங்கேற்கவில்லை.இக்கூட்டத்தை பெயரளவுக்கு நடத்துவதாக விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்து வெளியேறினர்.இதுதொடர்பாக அவர்கள் கூறும் போது, "கடந்த மாதம் 31-ம் தேதி மாலை, இணையத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டமும் தாமதமாக தொடங்கப்பட்டது. அதிலும்,விவசாயிகள் முழுமையாக கருத்து தெரிவிக்க வாய்ப்புஅளிக்கப்படவில்லை. பெயரளவுக்கு குறைதீர் கூட்டம் நடத்தப்படுவதால், விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆகவே, இக்கூட்டத்தை புறக்கணிக்கிறோம்" என்றனர்.
உடுமலை
உடுமலை வேளாண் விரிவாக்க மையத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வினீத் பங்கேற்காததால் பல்வேறு கோரிக்கைகளோடு காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்து, கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர்எஸ்.ஆர்.மதுசூதனன் கூறும்போது, "2 ஆண்டுகளாக காணொலி மூலம்நடைபெற்ற கூட்டங்களில் எழுப்பப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. ஆட்சியரும் பங்கேற்காததால், கூட்டத்தை புறக்கணிப்பு செய்துள்ளோம். இதே நிலை நீடித்தால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை நடத்துவதுகுறித்து மாநில குழுவில் முடிவு செய்யப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago