கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை லாரியுடன் போலீஸார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சின்னசாமி தலைமையில், எஸ்எஸ்ஐ பிரகலநாதன், போலீஸார் ஆசைத்தம்பி, குமார் ஆகியோர் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்துமாறு போலீஸார் சைகை காட்டினர். வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீஸார் லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கினர். வாகனத்தை ஓட்டி வந்தவரை பிடித்த போலீஸார் லாரியில் சோதனை செய்தனர்.
அதில், ரூ.5 லட்சம் மதிப்பிலான சுமார் 50 சாக்கு மூட்டைகளில் புகையிலைப் பொருட்கள், பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது. இதையடுத்து லாரியுடன், குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த லாரியின் ஓட்டுநரும், உரிமையாளருமான கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த தபால்மேடு அருகில் உள்ள கல்லாத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பு(35) என்பதும், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா பொருட்களை கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அன்புவை கைது செய்து, ரூ.7 லட்சம் மதிப்பிலான லாரி மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago