பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதி செய்திட வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் பள்ளிகள் திறப்பதையொட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். ஆட்சியர் பேசியதாவது:
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்கள், உள்ளாட்சி துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகம், பள்ளி வகுப்பறைகள், தளவாட பொருட்களை தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவறைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
மேலும், மாணவர்களுக்கு சீரான இடைவெளியில் உடல்பரிசோதனை செய்தல், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதி செய்திட வேண்டும். பள்ளி கட்டிடங்கள், வகுப்பறையில் உள்ள மின்சாதன பொருட்களை பழுது நீக்கி மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி சீருடையில் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள், பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த மின் கம்பங்களை சீர்படுத்தியும், மின்சார பழுதுகளை சரிசெய்தும், மின் கம்பங்கள் பாதுகாப்பு முறையில் உள்ளதா என உறுதிப்படுத்திடவும் வேண்டும். சத்துணவுத் துறை அலுவலர்கள், மாணவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் சத்துணவு வழங்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசின் கரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பரமசிவன் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago