கரோனா முழு ஊரடங்கின்போது வணிகர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மண்டலக் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. திருச்சி மண்டலத் தலைவர் எம்.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மண்டலத் தலைவர் எல்.செந்தில்நாதன், மாநில துணைத் தலைவர் சீனு.சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார்.
கூட்டத்தில் வணிகர்கள் மீதான வாட் வரி தொடர்பான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதானக் கூட்டத்தை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும். கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு அளிக்கப்பட்ட பிறகும் வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும்.
தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பு நிலையிலேயே தடுக்க வேண்டுமே தவிர, அவற்றை பயன்படுத்தும் சிறு குறு வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சித் துறைகளுக்கு சொந்தமான கடைகளை காலம் காலமாய் வணிகம் செய்துவருவோருக்கு ஒதுக்க வேண்டுமே தவிர, ஏலம் விடக்கூடாது. கரோனா முழு ஊரடங்கின்போது வணிகர்கள், வணிக நிறுவனங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, திருவாரூர் ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago