அரியலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தார். கூட்டத்தில், சிதம்பரம் எம்.பி தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பேருக்கு தலா ரூ.7,600 மதிப்பில் மூன்று சக்கர வண்டிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 6 பேருக்கு தலா ரூ.6,500 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட எஸ்.பி கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் பெயரை வைக்க வேண்டும் என எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதையும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன்.
அரியலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கவும், சமூக நீதியை முறைபடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும் மத்திய அரசை வலியுறுத்துவேன். அரியலூர் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் ரயில்கள் நிற்கவும், செந்துறையில் ரயில்கள் நின்று செல்லவும் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago