கெயில் எரிகாற்று குழாய் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வேண்டுமென, விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆகியவை இணைந்து நடத்தும், தமிழ்நாடு உழவர்களின் மாபெரும் பேரவை எனும் மாநாடு, திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே நிழலிகவுண்டம்பாளையம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
அகில இந்திய விவசாய தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் வலியுறுத்தியதற்கும், வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ததற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மூன்று வேளாண் சட்டங்களை எந்தவித நிபந்தனையும் இன்றி, மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், தமிழகத்தில் நாராயணசாமிநாயுடு தலைமையில் 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராடி 63 உயிர்களை தியாகம் செய்து பெற்ற வேளாண் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த மசோதா 2021-ஐ திரும்பப்பெற வேண்டும்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்யாத வகையில், தமிழக அரசு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும், விருதுநகர் - திருப்பூர் வரை 765 கி.மீ உயர் மின்கோபுரத் திட்டத்தை, கேபிள் மூலம் சாலையோரமாக அமைக்க வேண்டும். சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுக்காத வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தமிழ்நாடு வழியாக பெங்களூரு வரை அமைக்கப்படும் மத்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனத்தின் எரிகாற்று குழாய் திட்டத்தை, கேரளா, குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளதைபோல் சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago