தெற்கு அவிநாசிபாளையத்தில் அமைக்க உத்தேசித்துள்ள சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி தொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் நடத்தியது.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும்போது, "மொரட்டுபாளையத்தில் ஏற்கெனவே 9 கல்குவாரிகள் உள்ளன. 5 எம்.சாண்ட் ஆலைகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட எம்.சாண்ட் ஆலைகள் உள்ளன. இதில் 13 ஆலைகள் மட்டுமே அனுமதி பெற்று இயங்குகின்றன. மற்ற அனைத்து ஆலைகளும் சட்டவிரோதமாக இயங்குகின்றன. அரசின் அனுமதியின்றி தரமற்ற எம்.சாண்ட் உற்பத்தி செய்துவரும் அனைத்து ஆலைகளையும் மூடி, அரசு ‘சீல்' வைக்க வேண்டும்.
தெற்கு அவிநாசிபாளையம் கல்குவாரி அருகே 3 கி.மீ. தூரத்தில் கொடுவாய் உள்ளது. கருத்துகேட்புக் கூட்டத்தை அங்கே நடத்தி இருக்கலாம்.
இந்த கருத்துகேட்புக் கூட்டத்துக்கான செய்தி 10 கி.மீ. சுற்றளவில் உள்ள எந்த ஒரு ஊராட்சி மக்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் தெரியாது. கருத்துகேட்புக் கூட்டத்தில் ஆலையை சார்ந்துள்ளவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். உள்ளூரை சேர்ந்த ஒருவர்கூட பங்கேற்கவில்லை. இது யாருக்கான கருத்துகேட்புக் கூட்டம் என்பது தெரியவில்லை. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியிலேயே கருத்துகேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
தெற்கு அவிநாசிபாளையத்தில் 70 சதவீத நிலங்கள், விவசாய நிலங்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படியெனில், 25 ஏக்கர் பரப்பில் அமையும் சுமார் 150 அடி ஆழம் கொண்ட இந்த கல் குவாரியால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மேய்ச்சல் நிலம் பாதிக்கப்படும். விவசாயம் அழியும். 10 கி.மீ. சுற்றளவில் எந்த கோயில்களும், தொல்லியல் சின்னமும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் வட்டமலை, ஊதியூர் மலைகளும், பல தொல்லியல் நினைவுச் சின்னங்களும் உள்ளன. இது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago