சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய மக்னா யானை, மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையொட்டியுள்ள விளை நிலங்களுக்குள் யானை, மான், பன்றி போன்ற விலங்குகள் நுழைந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழிகள் தற்போது தூர்ந்து போய் இருப்பதால், யானைகள் வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியேறி, பயிர்களை அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றன. இதனைத் தடுக்க விவசாயிகள் விளை நிலங்களில் அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜீரகள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட ஜோரா ஒசூர் கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் (65) என்ற விவசாயி,தனது நிலத்தில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளார். காட்டுப்பன்றிகளிடம் இருந்து அதனைக் காப்பாற்ற, நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, விளை நிலத்தில் நுழைய முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுகுறித்துஜீரகள்ளி வனச்சரகர் ராமலிங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் நடத்தியவிசாரணையில் இறந்தது மக்னா வகை யானை எனத் தெரியவந்தது. மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் ஜேம்ஸ் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரைத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago