பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் இவ்வழக்கை விசாரிக்கக் கூடாது என்று சிறப்பு டிஜிபி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரதுமேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண் எஸ்.பியை தனது காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, அவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்விவகாரத்தில் சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மற்றொரு எஸ்.பி மீதும் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் முன்பு அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் கடந்த 29-ம் தேதி விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி மற்றும் இவ்வழக்கில் சிறப்பு டிஜிபிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் மற்றொரு எஸ்.பி ஆகியோர் கடந்த 9-ம் தேதி நேரில் ஆஜராகினர். இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு கோரியிருந்தார். மனுதாரரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் சிறப்பு டிஜிபிக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்பி நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜரானார். அவர் தரப்பில் இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும்; வழக்கு தொடர்பான சில ஆவணங்களை வழங்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு டிஜிபி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க அவரது வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். அவர் சார்பில் அளித்த மற்றொரு மனுவில், இவ்வழக்கு விழுப்புரம் நீதிமன்ற எல்லைக்குள் வராது. எனவே இங்கு விசாரணை செய்யக்கூடாது என்றும் கோரியிருந்தார்.
இதில் அரசு தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வருகிற 2-ம் தேதிக்கு இவ்வழக்கை ஒத்திவைத்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர்மன்ற நடுவர் கோபிநாதன் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago