கிருஷ்ணகிரியில் இருந்து 103 நாட்களுக்குப் பிறகு - கர்நாடக, ஆந்திர மாநிலத்துக்கு 160 பேருந்துகள் இயக்கம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு 103 நாட்களுக்குப் பிறகு பேருந்து சேவை நேற்று தொடங்கியது.

கரோனா 2-வது அலை பரவியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள், கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு, ஆந்திரா மாநிலம் குப்பம், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. பெங்களூரு செல்லும் பேருந்துகள், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி வரை சென்றுத் திரும்பின. பெங்களூரு செல்லும் பயணிகள் அங்கிருந்து மாற்றுப் பேருந்துகள் மூலம் செல்லும் நிலை இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில், கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

இதுதொடர்பாக போக்குவரத் துறை அலுவலர்கள் கூறும்போது, தருமபுரி மண்டலத்தில் உள்ள, 500 புறநகர் பேருந்துகளில், 160 பேருந்துகள் பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு, 103 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் செல்கின்றன. பயணிகள் அனைவரையும் அரசு கட்டுப்பாடுகளுடன், முகக்கவசம் அணிந்து பயணிக்குமாறு அறிவுறுத்தி வருகிறோம். கிருமி நாசினியும் தெளிக்கப்படுகிறது, என்றனர்.

ஈரோட்டிலிருந்து கர்நாடகாவுக்கு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூரூ, கொள்ளேகால் உள்ளிட்ட இடங்களுக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூரு, மைசூருவுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், அந்தியூர், பர்கூர் வழியாகவும் கர்நாடக மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டதால், நேற்று முதல் ஈரோடு மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு, இரு மாநில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

அதேபோல், திம்பத்தில் இருந்து தாளவாடி செல்ல கர்நாடக எல்லையைக் கடந்து சில கிலோமீட்டர் பயணிக்க வேண்டி இருந்ததால், பேருந்துகள் தலமலை வழியாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக, தாளவாடிக்கு பழைய பாதையில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்