தெலங்கானாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன - மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்த பிறகு கணவரிடம் ஒப்படைப்பு :

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பெரம்பலூரில் மீட்கப்பட்டு, குணமடைந்த பிறகு, அவரது கணவரிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டார்.

தெலங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி நரசய்யா(45). இவரது மனைவி சுனிதா லட்சுமி(40). இவர்களுக்கு 3 மகள்கள். இந்நிலையில், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சுனிதா லட்சுமி கடந்த 2010-ம் ஆண்டு காணாமல் போனார். இதுகுறித்த புகாரின்பேரில் அங்குள்ள போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், போலீஸார் காட்டிய அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலத்தை நரசய்யா தனது மனைவி என எண்ணி இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த 2015-ல் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த சுனிதா லட்சுமியை வேலா கருணை இல்லத்தினர் மீட்டு பராமரித்து வந்தனர். அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மனநல பாதிப்பிலிருந்து மீண்டார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பக பிரிவு போலீஸார் தமிழகத்தில் உள்ள காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டு, பாதிப்பிலிருந்து மீண்ட வேறுமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் விவரத்தை அண்மையில் சேகரித்தபோது, பெரம்பலூரில் சுனிதா லட்சுமி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து. உடனடியாக நரசய்யாவுக்கு தகவல் தெரிவித்தனர். மனைவி உயிருடன் இருப்பதையறிந்த நரசய்யா மகிழ்ச்சியடைந்து, நேற்று முன்தினம் உறவினர்களுடன் பெரம்பலூருக்கு வந்தார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தம்பதியர் சந்தித்துக்கொண்டதால், இருவரும் உணர்ச்சிப் பெருக்கால் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை காவல் கண்காணிப்பாளர் வளவன் உள்ளிட்ட போலீஸார், நரசய்யா கொண்டுவந்த ஆவணங்களை சரிபார்த்த பிறகு, தம்பதியரை நேற்று வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்