கோவை தாமரை நகரைச் சேர்ந்தவர் எம்.சங்கீதா(41). இவரது நில ஆவணங்கள் காணாமல்போன நிலையில் புதிய ஆவணம் பெறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது, போலியான சான்றுகளை தயாரித்து, ஆவண நகல் பெறலாம் என கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பி.மனோகரன்(42), பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பி.ராஜேந்திரன்(47) ஆகியோர் சங்கீதாவுக்கு ஆலோசனை கூறியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் சங்கீதாவின் நில பத்திரம் காணாமல் போனதாகவும், இதுதொடர்பாக இலுப்பூரில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய பாலமுருகனின் கையெழுத்திட்டு, முத்திரை வைத்ததைப் போன்றும் போலியான சான்று தயாரித்து கிணத்துக்கடவு சார் பதிவாளர் அலுவலகத்தில் அண்மையில் சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து உண்மைத் தன்மையை அறிவதற்காக இலுப்பூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு தபால் மூலம் சான்றிதழை சார்பதிவாளர் அனுப்பியுள்ளார். இதைப் பரிசீலித்தபோது, போலியான சான்றிதழ் என தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இலுப்பூர் போலீஸார், சங்கீதா, மனோகரன், ராஜேந்திரன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago