தஞ்சாவூரில் திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் நேற்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து நடுவர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே உள்ள சீதா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சாமிநாதன் வீட்டில் ஆக.12-ம் தேதி பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 6 லட்சம் ரொக்கம் திருடு போனது.
இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் தடயவியல்துறையினர் அங்கிருந்த கைரேகைகளை ஆய்வு செய்தபோது பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒத்துப்போனதாக கூறப்படுகிறது.
இதில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள தாண்டவன்குளம் முதன்மைச் சாலையைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சத்தியவாணன் (31), தஞ்சாவூர் பூக்காரத் தெருவைச் சேர்ந்த சூர்யா (29), சென்னையைச் சேர்ந்த அப்துல்மஜீத் (41) ஆகியோரை போலீஸார் பிடித்துச் சென்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவர்களில் சத்தியவாணனுக்கு நேற்று அதிகாலை நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மர்மமான முறையில் உயிரிழந்த சத்தியவாணன் மீது தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 12 குற்ற வழக்குகள் உள்ளன. இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ் குமார், மாவட்ட எஸ்.பி ரவளிப்ரியா காந்தபுனேனி ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், அங்குள்ள காவல் நிலையத்துக்கும் சென்று போலீஸாரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் காவல் துறை விசாரணையில் இருந்த நபர் உயிரிழந்தது தொடர்பாக தஞ்சாவூர் முதலாம் எண் நீதித்துறை நடுவர் முகமதுஅலி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று போலீஸார் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago