திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து, பிஏபி திட்டத்திலுள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான வாய்க்கால் உள்ளது.
இதில் விநாடிக்கு 1200 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும். இதன்மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பல லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதான வாய்க்காலின் கரையில் கொட்டப்பட்டிருந்த மண், மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிஏபி விவசாயிகள் நலச்சங்க நிர்வாகி விஜயசேகரன் கூறும்போது, "திருமூர்த்தி அணையில் தொடங்கி 150 கி.மீ. தொலைவுவரை தண்ணீர் கொண்டுசெல்வதில், பிரதான வாய்க்காலின் பங்கு குறிப்பிடத்தக்கது. மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கவும், மழை நீர் அதிகரித்து வாய்க்காலில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், இரு கரைகளிலும் குவிக்கப்பட்டிருக்கும் மண் மற்றும் மரங்கள் வாய்க்காலின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்நிலையில், பாப்பனூத்து கிராமப் பகுதியில் வாய்க்காலின் கரையில் கொட்டப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான மண் திருடப்பட்டுள்ளது. ஒரு லோடு கிராவல் மண் ரூ.5000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து மட்டும் 1,000 லோடு மண் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகைப்பட ஆதாரத்துடன் தொடர்புடைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிய விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிடுவதோடு, தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி கூறும்போது, "பிரதான வாய்க்காலின் இரு கரைகளில் இருந்தும் 20 மீட்டர் முதல் 60 மீட்டர் வரையிலான இடம் பிஏபிக்கு சொந்தமானது. அது, இடத்துக்கு ஏற்றார்போல அமையும்.
மண் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இடம் பிஏபிக்கு சொந்தமானதுதான். எனவே, அங்கு ஆய்வு நடத்தப்படும். மண் எடுத்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியாது. ஆய்வுக்குப் பின் காவல்துறை மூலமாக, தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago