காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் போலீஸ் பூத் அருகே சேலம் செல்லும் பேருந்தில் ஏறிய தம்பதிகளிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் கூட்டம் அதிகம் இருந்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பல மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கூடியிருந்தனர். ஆனால் அங்கு போதுமான காவலர்கள் இல்லை. இதனை சாதகமாக்கிக் கொண்ட திருடர்கள் பர்தா அணிந்தவாறு பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த சுமன் - சுமதி தம்பதி தனது உறவினர் திருமணத்துக்காக காஞ்சிபுரம் வந்தனர். பிற்பகல் ஒரு மணி அளவில் திருவண்ணாமலை செல்வதற்காக காஞ்சிபுரம் அரசுப் பேருந்தில் அவர்கள் ஏற முயன்றனர். அப்போது பின்னால் பர்தா அணிந்த நபர் சுமதி மீது இடித்தபடி சென்றுள்ளார். பின்னர் பேருந்தில் அமர்ந்துவிட்டு தங்கள் பையைப் பார்த்தபோது பைக்குள் இருந்த சிறிய பை ஒன்று காணாமல் போயிருந்தது. அதில் கம்மல், செயின் உட்பட ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்தன. பர்தா அணிந்த நபர் அந்தப் பையைத் திருடியிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
இதுகுறித்து புகார் தெரிவிக்க காவல் நிலையத்துக்குச் சென்றபோது காவலர்கள் யாரும் இல்லை. பேருந்து நிலையத்தில் உள்ள போலீஸ் பூத் பூட்டப்பட்டிருநத்து. இதனைத் தொடர்ந்து சிவகாஞ்சி காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சுற்றுலாத் தலமான காஞ்சிபுரத்தில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையப் பகுதியில் அதிக அளவிலான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago