அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள் மற்றும் கைவினைப் பொருட்களை மின்வணிகம் மூலமாக விற்பனை செய்யும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது: அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த தறியின் மூலம் பட்டுப்புடவைகளை நெய்து வருகின்றனர்.
மேலும், 700-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் கம்பு, சோளம், முந்திரி பருப்பு உள்ளிட்டவற்றிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள், சணல் பை, பனை ஓலை போன்ற கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு அரியலூர் மாவட்டத்தில் தயாராகும் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் www.ariyalur.nic.in என்ற இணைய தளத்தில் அதற்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை தேர்வு செய்து, அதிலுள்ள வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை பெறலாம்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மின் வணிகம் (e-Commerce) மூலம் விற்பனை செய்ய தனிப்பட்ட செயலி உருவாக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago