கவுள்பாளையத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட - வீடுகளின் தரம் குறித்து என்ஐடி வல்லுநர்கள் ஆய்வு செய்ய நடவடிக்கை : பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் தகவல்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் கவுள்பாளையத்தில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளின் தரம் குறித்து என்ஐடி வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ பிரபாகரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையத்தில் ரூ.41.07 கோடி மதிப்பில் 504 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவற்றின் சில பகுதிகளில் பூச்சுகள் பெயர்ந்துள்ளதாகவும், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்தன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா நேற்று முன்தினம் அங்கு சென்று ஆய்வு செய்து, வீடுகளில் உள்ள குறைகளை சீரமைத்த பிறகே ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சி யர் ப. வெங்கட பிரியா, பெரம் பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

அதன்பின், எம்எல்ஏ பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியது: குடியிருப்புகளில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்துள்ள இடங்கள், விரிசல் உள்ள இடங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து கட்டுமான வல்லுநர்களை வரவழைத்து, இந்த குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்யவும், தரச்சான்று பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது, தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர் மா.அழகுபொன்னையா, உதவிசெயற்பொறியாளர் நவநீதக்கண்ணன், உதவிப்பொறியாளர் ஷகிலா பீவி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்