பெரம்பலூர் அருகே 900 ஆண்டுகள் பழமையான கல்செக்கு கண்டெடுப்பு :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் அருகே வெங்கலம் கிராமத்தில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான கல்லால் ஆன எண்ணெய் பிழியும் செக்கு கண்டறியப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர் முனைவர் ம.செல்வபாண்டியன், சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, சமூக ஆர்வலர் பா.வசந்தன் ஆகியோர் வெங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செல்லியம்மன் கோயிலின் முன்புறம் தரையில் பதிக்கப்பட்ட ஒரு கல் செக்கை கண்டறிந்தனர்.

இதன் உயரம் 33 செ.மீ. வெளிவிட்டம் 71செ.மீ. உள் விட்டம் 64 செ.மீ. செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். செக்கின் பக்கவாட்டுப் பகுதியில் இரண்டு வரிகளில், ‘ மல்ல (டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் லம்பலம்’ எனும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ம.செல்வபாண்டியன் தெரிவித்ததாவது:

கல்செக்கில் காணப்படும் எழுத்தின் வடிவத்தைக் கொண்டு இது 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம். பழங்காலத்தில் உணவுப் பொருள்களை அரைக்கவும், கோயில்,வீடுகள், தெருக்கள் ஆகியவற்றில் விளக்கு எரிக்க எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்கவும் செக்குகள் பயன்பட்டன.

இதற்கென அரசர்கள், படைத்தலைவர் கள்,செல்வந்தர்கள் ஆகியோர் கோயில் வழிபாட்டுக்கும், பொதுப் பயன்பாட்டுக்கும் கல்செக்குகளைச் செய்து தானமாக வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி, சத்திரமனை வேலூர் ஆகிய கிராமங்களில் இத்தகைய கல்செக்குகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. இதில் வெங்கலம் கிராமத்தில் உள்ள இந்த கல் செக்கு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பழமையானதாகும்.

மல்லடி நாட்டான் என்பவர் இந்த கல்செக்கை செய்து கொடுத்திருக்கிறார். இவர் யாரென அறிய முடியவில்லை. பந்தல் அம்பலம் என்பது பந்தலுடன் கூடிய பொது இடமாகும். இது தற்போதைய செல்லியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியாக இருக்கலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்