வேலூர் தனியார் மருத்துவமனை மேலாளர் வீட்டில் - 35 பவுன் நகைகள் துணிகர திருட்டு :

By செய்திப்பிரிவு

வேலூரில் தனியார் மருத்துவ மனை மேலாளர் வீட்டில் பீரோவை உடைத்து அதிலிருந்த 35 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் சத்துவாச்சாரி புது வசூர் கே.ஜி.என் நகரைச் சேர்ந்தவர் விஜயராகவன் (38). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா திருவண்ணாமலை நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியராக பணியாற்றி வரு கிறார். திருவண்ணாமலையில் தங்கியிருந்து பணியாற்றி வரும் கவிதாவுக்கு இரு தினங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லை என கூறப்படுகிறது. இதனால், வீட்டை பூட்டிக்கொண்டு விஜய ராகவன் தி.மலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், விஜய ராகவன் வீட்டின் கதவு திறந்திருப்பதாக அக்கம், பக்கம் வீட்டில் வசிப் பவர்கள் பார்த்துள்ளனர். இந்தத் தகவலை விஜயராகவனுக்கு நேற்று முன்தினம் இரவு தெரிவித் துள்ளனர். அதன்பேரில் நேற்று அதிகாலை ஊர் திரும்பியவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலை மையிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில், பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

மேலும், பீரோவில் இருந்து இரண்டு மர்ம நபர்களின் கை விரல் ரேகைகளை தடய அறிவியல் நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர். இதை வைத்து பழைய குற்றவாளிகளின் கைவிரல் ரேகைகளுடன் ஒத்துப் போகிறதா? என ஆய்வும் செய்து வருகின்றனர்.

சத்துவாச்சாரி பகுதியில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் துறையினர் கூடுதல் எண்ணிக்கையில் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்