தி.மலை ரயில் நிலையத்தில் - மழையில் நனைந்து 600 டன் கோதுமை சேதம் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை ரயில் நிலைய நடைமேடை தளத்தில் வைக்கப்பட்டிருந்த 600 டன் கோதுமை மூட்டைகள் நனைந்து நேற்று சேதமடைந்துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 2,400 டன் கோதுமை, சரக்கு ரயில் மூலமாக கடந்த 19-ம் தேதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை, சரக்கு ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, தி.மலை அடுத்த சீலப்பந்தல் கிராமத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான கிடங்களுக்கு கொண்டு செல்லும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றுள்ளன. 1,800 டன் கோதுமை கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலைய நடைமேடை தளத்தில் 600 டன் கோதுமை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு பெய்த கன மழைக்கு, 600 டன் கோதுமையும் நனைந்து சேதமடைந்துள்ளது. இதையடுத்து அவசர அவசரமாக, கோதுமை மூட்டைகள் மீது தார்பாய் கொண்டு மூடப்பட்டது. இந்திய உணவுக் கழகம் மற்றும் ஒப்பந்ததாரர் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், கிடங்குக்கு கொண்டு செல்லாமல் ரயில் நிலைய நடைமேடை தளத்தில் வைக்கப்பட்டிருந்த கோதுமை மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததாக ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.

இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு கூடுதலாக வழங்குவதற்காக, பொது விநியோகத் திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த கோதுமை மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்