ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையை தூர்வார தமிழக அரசு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பரப்பலாறு அணை அமைந் துள்ளது. இதன் மொத்த உயரம் 90 அடி. மொத்த நீர்பரப்பு 113.76 ஹெக்டேர். மழைக் காலங்களில் அணைக்கு நீர் வரும்போது வண்டல் மண்ணும் அடித்து வரப்படுகிறது. இதனால் நீர்மட்டம் 20 அடி வரை குறைந்தது.
நீர்மட்டத்தை பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத் தால் அதிக நீர் தேக்கலாம் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப் பட்டது. ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வும் உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, தனது தேர்தல் வாக்குறுதியில், பரப்பலாறு அணை தூர்வாரப்பட்டு நீர்மட்டம் பழைய நிலைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார். தற்போது இவரது முயற்சியால் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையை தூர்வார ரூ.40 லட்சத்தை அரசு ஒதுக்கி உள்ளது. அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தங்கள் நிலங்களில் பயன்படுத்த இலவசமாக வழங்கப்பட உள்ளது. வண்டல் மண்ணுக்கு கீழ் படிந்துள்ள மண்ணை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கோபி கூறுகையில், இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பாசனத் திறன் மேம்படுத்தப்படும். ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். மணல் விற்பனை மூலம் அரசுக்கு 44,79,287 ரூபாய் வருவாய் கிடைக்கும். தூர்வாரும் பணிக்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அணையை தூர்வாரி நீர்மட்டத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago