தஞ்சாவூர் அருகே மொகரம் பண்டிகையையொட்டி, ‘அல்லா சாமி’க்கு இந்துக்கள் விழா எடுத்து, 10 நாட்கள் விரதம் இருந்து, நேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெரும்பான்மையாக இந்துக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் 4 முஸ்லிம் குடும்பத்தினர் மட்டும் வசிக்கின்றனர். இங்கு இந்துக்கள் சார்பில் ஆண்டுதோறும் முஸ்லிம்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையையொட்டி, அல்லாவுக்கு விழா எடுத்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு மொகரம் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பு ஊரின் மையப்பகுதியான செங்கரையில் பந்தல் அமைத்து, அதில் அல்லா சாமி என்றழைக்கப்படும் கை உருவம் கொண்ட பொருளை வைத்து, வழிபட்டு வந்தனர். இதற்காக, 10 நாட்களும் விரதம் இருந்து, தினமும் இருவேளை பூஜை நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து, மொகரம் பண்டிகைக்கு முந்தைய தினமான நேற்று முன்தினம் இரவு அல்லா சாமிக்கு மாலை அணிவித்து, வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர். வீடுகளில் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து, அல்லா சாமியை கிராம மக்கள் வழிபட்டனர்.
மொகரம் பண்டிகை தினமான நேற்று அதிகாலை வரை நடைபெற்ற இந்த வீதியுலாவில், கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அல்லா சாமி எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், செங்கரையில் தீ மிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த ஆர்.ரவிச்சந்திரன் கூறியது: இந்துக்கள் அதிகம் உள்ள எங்கள் ஊரில், முஸ்லிம்களின் பண்டிகையான மொகரம் பண்டி கையை எங்களின் முன்னோர் வழிகாட்டுதலின்படி, தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுக ளுக்கும் மேலாக கொண்டாடி வருகிறோம். இவ்விழாவை இந் துக்கள் கொண்டாடும்போது, முஸ் லிம்களும் உடனிருந்து வழிபடு கின்றனர்.
இதற்காக 10 நாட்கள் விரதம் இருந்து, அல்லா என்று எங்களால் அழைக்கப்படும் கை உருவத்துக்கு, நாங்கள் கரகம் எடுப்பதுபோல பூக்களால் அலங் கரித்து, பட்டுத்துணிகளைப் போர்த்தி, இரவு முழுவதும் வீடு வீடாக எடுத்துச் செல்கிறோம். மறுநாள் அதிகாலையில் அல்லாவை வணங்கி, தீ மிதித்து எங்களின் வேண்டுதலை நிறை வேற்றுகிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago