விற்பனை முனைய கருவிகளை பயன்படுத்தாத, உரம் விற்பனையாளர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில், விற்பனை முனைய கருவி இயக்குவது மற்றும் பழுது சரி செய்தல் முகாம் நடந்தது. விஷன்டெக் தொழில்நுட்ப வல்லுநர் ஜெயக்குமார், விற்பனை முனைய கருவியை இயக்குவது மற்றும் விற்பனை முனைய இயந்திரத்தில் பட்டியலிடுவது தொடர்பான விவரங்களை தெரிவித்தார். முகாமில், உரம் விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன், விற்பனை முனைய கருவியின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.
அவர் பேசியதாவது: உரம் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு, அவர்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்து கைரேகை பதிவுடன் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் வாங்கும் உரத்திற்கு தனித்தனியாக பட்டியல் வழங்க வேண்டும். விவசாயிகள் உரம் வாங்க வரும்போது கண்டிப்பாக ஆதார் அட்டையைக் கொண்டுவர வேண்டும். அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.
இது தொடர்பாக வேளாண் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது விற்பனை முனைய கருவி களை பயன்படுத்தாத விற்பனையாளர்களின் கருவி பறிமுதல் செய்து உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ் வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago