‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் - தூத்துக்குடி மாவட்டத்தில் 11,310 மனுக்களுக்கு தீர்வு : மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் பொறுப்பேற்றதில் இருந்து 100 நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறுதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் 11,310 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

11 நபர்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.36.05 லட்சம் மதிப்பிலான கடன் உதவி மற்றும் மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 7,598 பேருக்கு ரூ.64.66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 100 நாட்களில் மாவட்டத்தில் 11,450 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று தடுப்பு பணியை மேற்கொள்ளும் வகையில் வீடு, வீடாகச் சென்று நோய் தொற்றுகண்டறியும் பணிக்காக 4,167 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

3 மருத்துவர்கள் மற்றும் 58 செவிலியர்கள், 43 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நோய் தடுப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். கரோனா நோய்தொற்றால் குறைந்த அளவு பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக 850 படுக்கை வசதிகளுடன் 4 தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கரோனா சிகிச்சைக்கு தேவையான உட்கட்கட்டமைப்பு வசதிகள்ஏற்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 3,57,555 பேருக்கும், 2-வது தவணையாக 60,429 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சையை பெற்ற 306 பேருக்கு ரூ.2.87 கோடி காப்பீட்டு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை அமல்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி சராசரியாக18,751 பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். அதே போன்று மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் 131 பேர் பயன் பெறுகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுசம்பவத்தின் போது இறந்தவர்களின் உறவினர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட 93 பேருக்குதலா ரூ.1 லட்சமும், ஒருவரின் தாய்க்கு ரூ.2 லட்சமும் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் மத்திய குற்றபுலனாய்வுத்துறை வசம் ஒப்படைக் கப்பட்ட வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர ஏனைய 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்