தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தமிழக அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி தொழில்துறை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் லெனின் தலைமையில் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் கூட்டமைப்பினர், தூத்துக்குடி மக்கள்வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தினர், தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்கம், மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களிடம் அளித்த மனு விவரம்:
நாங்கள் பல ஆண்டுகளாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தோம். தமிழகம் முழுவதும் இருந்து தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இதனால்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இந்தநிலையில் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சில அந்நிய சக்திகளின் தூண்டுதலால் ஆலை மூடப்பட்டு விட்டது. நாங்கள் 25 ஆண்டுகளாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வேலை பார்த்து வந்தோம். எங்களில் யாருக்கும் புற்றுநோய் வரவில்லை. இதனை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்து தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில்இருந்து ஆக்சிஜன் உற்பத்திசெய்து அனைத்து மாவட்டங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்போது ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால் வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது.
எனவே, வேலை இழந்து வாடும் 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசின் உதவித்தொகை கிடைக்க உங்கள் உதவியை எதிர்பார்க்கிறோம். மேலும், தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago