குற்றங்களை தடுக்கும் வகையில் - புதிய மின்னணு ரோந்து செயலி அறிமுகம் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகரில் குற்றங்களை தடுக்கவும், ரோந்துப் பணியை துல்லியமாக கண்காணிக்கவும் புதிய மின்னணு ரோந்து செயலியை (E-BEAT APP) மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா நேற்று அறிமுகப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாநகரில் உள்ள வடக்கு, தெற்கு காவல் சரகத்தில் உள்ள 8 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில் 23 ரோந்து ஏரியாக்களாக பிரித்து, ஒவ்வொரு நேரத்துக்கும், ஒரு ரோந்துக்கு இரண்டு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களது ரோந்துப் பகுதியில் உள்ள வங்கிகள், ஏடிஎம் மையங்கள், குடியிருப்புப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் பட்டா புத்தகங்களில் கையொப்பமிட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுவர்.

‘கியூ ஆர்’ குறியீடுகள்:

இதனை நவீனப்படுத்தும் வகையில், ரோந்து அதிகாரிகள் ரோந்து செய்த இடங்களை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் மின்னணு ரோந்து செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 629 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு ‘கியூஆர்’ குறியீடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்படி செயலி, கூகுள் ஜிபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், எந்த இடத்தில் ரோந்து காவல் அதிகாரி பணியில் உள்ளார் என்பதை அறியமுடியும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க முடியும். மாநகரில் உள்ள சோதனைச்சாவடிகள், வாகன தணிக்கை செய்யும் இடங்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களின் செயல்பாடுகள் ஆகியவையும் இந்த செயலியுடன் இணைக்கப்பட உள்ளன. குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை விரைவில் கண்டறிய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், காவல் துணை ஆணையர்கள் செ.அரவிந்த், பி.ரவி உட்பட பலர் உடனிருந்தனர். போலீஸாரின் ரோந்துப் பணியை மாநகரக் காவல் ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்