பிளஸ் 2-வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதால் - கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடும் போட்டி : பி.காம், பி.ஏ. ஆங்கிலத்தில் சேர குவிந்த விண்ணப்பங்கள்

By என்.சன்னாசி

கரோனா 2-வது அலை அச்சத்தால் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 தேர்வில் 20 சதவீதம் மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வில் 30 சதவீதம் என மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. வகுப்புகளுக்கு வராத 1,656 மாணவர்கள் தவிர, 8,16,473 மாணவர்களும், 4,35,973 மாணவியரும் பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாநிலத்தில் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

அரசு உதவிபெறும் கல்லூரி களில் இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கை முடியும் நிலையில் உள்ளது. அரசு கல்லூரிகளில் ஓரிருநாட்களில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.

இதுகுறித்து கல்லூரிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த ஆண்டு பிளஸ் 2-வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் சேர்வதை விட கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து பட்டம் பெறலாம் என்ற மன நிலையில் மதுரை மண்டலத்தில் உள்ள 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் அதிகமாக வந் துள்ளன.

அரசு கல்லூரிகளில் ஒரு வகுப்புக்கு 40 முதல் 50 இடங்கள் வரை உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

சிறுபான்மை கல்லூரிகளில் 60 இடங்களுக்கு 600 விண்ணப் பங்கள் வந்துள்ளன. அனைத்து கல்லூரிகளிலும் வழக்கம்போல பிகாம், பி.எஸ்சி. கணினி அறிவியல், பிஏ ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2-வில் கணிதம், அறிவியல் பாடப் பிரிவுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்து மொழிப் பாடமான ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் பி.ஏ. ஆங்கிலம் படிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அனைத்து கல்லூரிகளிலும் ஆங்கில பாடப் பிரிவுக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

மாணவர்கள் பலர் காலை ஷிப்ட் வகுப்புகளை விரும்பினாலும், கரோனா பரவல் அச்சத்தால் இந்த ஆண்டும் ஆன்லைனிலேயே வகுப்புகள் தொடரும் வாய்ப்பே உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்