‘இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தோர் நாளை பங்கேற்க அழைப்பு’ :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷ் நேற்று கூறும்போது, "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 சட்டப் பிரிவு 12(1) (சி)-ன் கீழ், சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசால் ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, 2013-14-ம் கல்வி ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

நடப்பு கல்வி ஆண்டுக்கு, கடந்த ஜூலை 5-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில், பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள 146 பள்ளிகளில், நாளை (ஆக.19) காலை 9 மணிக்கு குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பித்த பெற்றோர், தாங்கள் விண்ணப்பித்த பள்ளியில் நடைபெறும் குலுக்கலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE