தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே - படுகை அணை கட்டும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு :

மருதேரியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியே 90 லட்சம் மதிப்பில் படுகை அணை கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அகரம் - மருதேரி இடையேதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியே 90 லட்சம் மதிப்பில் படுகை அணை கட்டுமான பணிகளும், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்தில் ஏரிகள், கால்வாய்கள், மதகுகள் புனரமைப்பு பணிகள் என ரூ.10.38 கோடி உட்பட ரூ.21 கோடியே 28 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மருதேரி படுகை அணையின் சுவர் 125 மீட்டர் நீளப்பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள கட்டுமானப் பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணி நிறைவு பெற்றால் பண்ணந்தூர் ஏரி, வாடமங்கலம் ஏரிகளின் மூலம் 1,155 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 4 கூட்டுக் குடிநீர் கிணறுகள் மூலம் 25 ஆயிரம் மக்கள் குடிநீர் வசதி பெறுவார்கள்.

சிங்காரப்பேட்டை தீர்த்தகிரி வலசை பெரிய ஏரியின் கரை உடைப்பு ஏற்படாத வகையில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. இப்பணிகள் முடிவுற்றால் 2,705 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மேல்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE