தருமபுரி, கிருஷ்ணகிரியில் 34 இடங்களில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று 34 இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கிருஷ்ணகிரி நகரில் 10 இடங்களிலும், ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிலும் உள்ள 9 அரசு அலுவலகம் என கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் நேற்று காலை முதல் மாலை வரை 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டச் செயலாளர் மணி தலைமை வகித்தார். வட்டத் தலைவர் வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் நடராஜன், மாவட்ட இணைச் செயலாளர் ஜெகதாம்பாள், மாவட்ட துணைத் தலைவர் மஞ்சுளா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரிபவர்களை கால முறை ஊதியத்திற்குமாற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள், நிதி நிலை அறிக்கையில் இல்லாததைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

15 இடங்களில்

தருமபுரி மாவட்டத்தில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தருமபுரி நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண் வணிகத் துறை இணை இயக்குநர் அலுவலகம், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம்,சார்நிலை கருவூல அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் ஜெயவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

இதைப் போலவே, இதர இடங்களிலும் நிர்வாகிகள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE