கரோனா தொற்று அதிகரிப்பு - தி.மலையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன :

By செய்திப்பிரிவு

தி.மலை நகரில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததால் மாலை 5 மணிக்கு கடைகள் மூடப்பட்டிருந்தன.

தி.மலை நகரம் மற்றும் காட்டாம் பூண்டி மருத்துவ வட்டாரபகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளில் உள்ள அனைத் துக்கடைகளும் ஆகஸ்ட் 16-ம் தேதி (நேற்று) முதல் 10 நாட் களுக்கு மாலை 5 மணிக்குள் மூட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தி.மலை நகரம் மற்றும் காட்டாம் பூண்டி பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்குள் கடைகள் மூடப்பட்டன.

அதே நேரத்தில் திறந்திருந்த ஒரு சில கடைகளையும் மூடுமாறு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட் சித் துறையினர் அறிவுறுத்தினர். மாலை 5 மணிக்கு கடைகள் மூடப்பட்டதால், மாட வீதி உள்ளிட்ட பிரதான சாலைகள் வெறிச்சோடின. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாலை 6 மணிக்கு பிறகு பயணி கள் கூட்டம் கணிசமாக குறைந்தது.

உணவகங்களில் மாலை 5 மணிக்கு பிறகு பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் செயல் பட அனுமதிக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடுகள் வரும் 25-ம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பிறகு, கரோனா தொற்று பரவல் குறைந்திருந்தால், கடைகளை திறக்க அனுமதிக்கப்படும் என்றும், இல்லை என்றால் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “பொது இடங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மூக்கு பகுதியை மூடாமல் வாய் மற்றும் தாடையில் முகக்கவசம் அணிவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆய்வு செய்யும்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்