2 சென்ட் நிலம் அபகரிப்பு - திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி போராட்டம் :

By செய்திப்பிரிவு

பிரியாணி வாங்கி கொடுத்து 2 சென்ட் நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மடவாளம் அம்பேத்கர் புரத்தைச் சேர்ந்தவர் வசந்தா(75). இவர், நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். நிலம் அபகரிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க வேண்டும் என அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் கூறினார். கரோனா தடுப்பு காரணமாக ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்க முடியாது, இங்குள்ள புகார் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு செல்லுமாறு காவலர்கள் கூறினர்.

இதை ஏற்காத மூதாட்டி வசந்தா, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, அங்கு வந்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மூதாட்டி வசந்தா மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘மடவாளம் பகுதியில் நான் குடிசை வீட்டில் வசித்து வருகிறேன். எனது கணவர் கண்ணாயிரம் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகின்றனர். நான் மட்டும் மடவாளத்தில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். இந்நிலையில், எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் எனக்கு அவ்வப்போது சில உதவிகளை செய்து வந்தார்.

மேலும், எனக்கு அடிக்கடி பிரியாணி வாங்கி கொடுப்பார். ஆதரவற்ற நிலையில் இருந்த எனக்கு ரமேஷ் செய்த சிறு, சிறு உதவி பெரும் பயனாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள 2 சென்ட் நிலத்தில் ரமேஷ் சுற்றுச்சுவர் எழுப்பி அந்த இடத்தை ஆக்கிரமித்தார். இதையறிந்த நான், எனது மகள் ஜெயந்தியுடன் சென்று ரமேஷிடம் கேட்டபோது, அந்த இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறிய ரமேஷ் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை என மனுவில் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, வசந்தாவிடம் இருந்து மனுவை பெற்ற ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர். இதையேற்ற மூதாட்டி வசந்தா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வளையாம்பட்டு கிராமத்தில் விவசாயப்பணிகள் மேற்கொள்ள பாசனக் கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அதிகாரிகளிடம் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்