வந்தவாசி அருகே பெரியகுப்பம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பயன்படுத்தாததைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியம் பெரியகுப்பம் ஊராட்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக் கின்றனர். சித்தேரியில் உள்ள திறந்தவெளி கிணற்றில் இருந்து குழாய் மூலம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு, கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படவே பொதுமக்கள் கோரிக்கையின்பேரில் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய 2 ஆழ்துளைக் கிணறுகள், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. சித்தேரியில் உள்ள 2 புதிய ஆழ்துளைக் கிணற்றில் இருந்து ஒன்றரை கி.மீ., தொலைவுக்கு குழாய் புதைக்கப்பட்டது. அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று பல மாதங்கள் கடந்தும், 2 ஆழ்துளைக் கிணறுகளுக்கான மின் இணைப்பு பெறவில்லை. மேலும், ஆழ் துளைக் கிணறுகளில் இருந்து குடிநீரை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்ற முடியவில்லை. இதனால், குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்காததைக் கண்டித்து, ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி பழனி தலைமையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு நேற்று பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் பற்றாக்குறையை கண்டித்தும், புதிய நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். மின் இணைப்பு கொடுக்கப்பட்டு புதிய மேல்நிலை குடிநீர் தோட்டி மூலம் குடிநீர் வழங்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago