தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு - ஜீனூரில் 150 ஏக்கரில் தோட்டக்கலைத்துறை கல்லூரி : கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் தோட்டக்கலைத்துறை கல்லூரி அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டிருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இம்மாவட்டத்தில் நெல், ராகி, சிறுதானிய பயிர் வகைகள், எண்ணெய்வித்து பயிர்கள், பருத்தி, கரும்பு, தக்காளி, வெண்டை, கத்திரி, பாகல், முட்டை கோஸ், காளிபிளவர், பீட்ருட், கேரட், முள்ளங்கி, சவ்சவ் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக மா சுமார் 1 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் அறிவிப்பு

இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய தொழிலை மேம்படுத்தவும், விவசாய தொழிலில் ஈடுபட்டவர்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் விவசாய தொழிலில் ஈடுபடும் வகையில், தோட்டக்கலைத்துறை மூலம் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், ஜீனூரில் கடந்த 2010-ம் ஆண்டு தோட்டக் கலைத்துறை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆட்சி மாற்றம் காரணமாக பல்கலைக்கழகம் அறிவிப்புடன் கிடப்பில் இருந்தது.

தொடர்ந்து வலியுறுத்தல்

அண்மையில் கிருஷ்ணகிரியில் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், இத்திட்டம் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என திமுக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான செங் குட்டுவன் வலியுறுத்தினார். மேலும், இதுதொடர்பாக மனு அளித்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் ஜீனூரில் 150 ஏக்கரில் தோட்டக்கலைத்துறை கல்லூரி அமைக்கப்படும் எனவும், இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில்...

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது:

தோட்டக்கலைத்துறை கல்லூரி அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் பயிர்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை, தட்பவெப்ப நிலை உள்ளிட்டவை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் இந்திய அளவில் தோட்டக்கலை பட்டதாரிகளை உருவாக்கிட முடியும்.

இருப்பினும், எதிர்காலத்தில் இக்கல்லூரியை பல்கலைகழக மாக மாற்றி கருணாநிதி அறிவித்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதேபோல, தோட்டக்கலை பயிர்களை ஏற்றுமதி செய்யும் வகையில், ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்