தமிழகம் முழுவதும் நேற்று 75-வதுஆண்டு சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதேபோல் இவ்விழா, செங்கல்பட்டு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின்னர் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கும், அவர்களின் பணியை பாராட்டி நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். இதில் கால்நடை பராமரிப்புத் துறையைச் சார்ந்த அலுவலர்களுக்கு நற்சான்று வழங்கப்படவில்லை. இதனால் அந்தத் துறையைச் சார்ந்த அலுவலர் முதல் ஊழியர்கள் வரை மாவட்ட நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் சிலர் கூறியதாவது:
கால்நடை பராமரிப்புத் துறையில் மருத்துவர்கள் ஆய்வாளர்கள், உதவியாளர்கள் என பலர் பணிபுரிந்து வருகிறோம். கரோனா காலத்திலும் சிறப்பாகப் பணியாற்றி, அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இலவச மருத்துவமனையை சிறப்பாக நடத்தி வருகிறோம். ஆனால்எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து நற்சான்றிதழ் பெறும் அலுவலர்களின் பட்டியலை காலதாமதமாக அனுப்பி விட்டார். இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையின் காஞ்சி மண்டல இயக்குநர் நடராஜகுமார் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், நற்சான்றிதழ் பெறத் தகுதி வாய்ந்த அலுவலர்களைப் பற்றிய விவரங்களை அனுப்ப சுற்றறிக்கை அனுப்பியது உண்மைதான். ஆனால், எந்த தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் எங்கள் துறை சார்பில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, செங்கல்பட்டு நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த சுதந்திர தின விழாவில் எங்கள் அலுவலருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து விவரம் கேட்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago