காஞ்சிபுரம் நகராட்சியின் 27-வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி, கடந்த 2007-ம்ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, புதிய உயர்நிலைப்பள்ளிக்கு அதே பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளத்தின் கரையில் 2 வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.
இதில், தற்போது 125 மாணவர்கள் மற்றும் 97 மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில், உயர்நிலைப் பள்ளி கட்டிடங்கள் குளத்தின் கரையில் கட்டப்பட்டுள்ளதால் விரிவுபடுத்த முடியாமல் இடநெருக்கடியுடன், பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும், நீர் நிலை நிலம் என்பதால் ஏற்கெனவே உள்ள கட்டிடங்களும் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.
இதனால், மாணவர்களுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த முடியாத நிலை உள்ளதால், பள்ளியின் எதிரே மஞ்சள்நீர் கால்வாயையொட்டி ஆக்கிரமிப்பில் உள்ள அ்ரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, பள்ளி கட்டிடம்அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: உயர்நிலைப் பள்ளிக்குத் தேவையான வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கநிலம் உள்ளதா என ஆய்வு செய்யாமல், குளக்கரையில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், விரிவுபடுத்த முடியவில்லை. ஆனால், பள்ளியின் எதிரே பிரதான சாலையையொட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஒரு சிலர் சிறிய அளவில் குடியிருப்புகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டால், உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான அனைத்து வகுப்பறை கட்டிடங்களும் ஒரே இடத்தில் அமைக்க நிலம் கிடைக்கும். குடிநீர், கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்த முடியும். அதனால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டு, பள்ளிக் கட்டிடங்கள் அமைக்க வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: திருக்காலிமேட்டில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து, அவற்றை மீட்கவும், உயர்நிலைப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் அமைக்க தேவையான நிலம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago