காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் - ஆட்சியர்கள் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின கொண்டாட்டம் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 75-வதுசுதந்திர தின விழாவை ஒட்டி மாவட்டஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து, 417 பயனாளிகளுக்கு ரூ.8.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கில் 75-வது சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர் மா.ஆர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர், காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கரோனா தொற்று பேரிடர் காலம்என்பதால், உள்ளாட்சி, மருத்துவம், வருவாய் துறைகளில் முன்கள பணியாளர்களாக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றுகளை ஆட்சியர் வழங்கினார்.

பின்னர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சார்பில் 76 பயனாளிகளுக்கு டிராக்டர், தையல் இயந்திரம், குடும்ப அட்டை, சுய உதவிக் குழுவினருக்கு கடன், பசுமை வீடு உட்பட ரூ.49.33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 29 போலீஸாருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் சரக டிஐஜி. சத்தியப் பிரியா எஸ்பிசுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மைதானத்தில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தேசிய கொடியை ஏற்றி, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அரசுத் துறைகளின் சார்பில்313 பயனாளிகளுக்கு ரூ.58.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், எஸ்பி விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மானுவேல்ராஜ், ஏஎஸ்பி ஆதார்ஸ் பச்சேரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிறகு, மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான வெண்புறாக்களை பறக்கவிட்ட ஆட்சியர், திறந்த வாகனத்தில் சென்று, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் நலத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மாவட்டதொழில் மையம், தாட்கோ உள்ளிட்டவை சார்பில் 28 பேருக்கு,ரூ.7.19 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்கள், முன் களப் பணியாளர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் 120 பேருக்கு கேடயங்கள், நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்மீனா பிரியதர்ஷினி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேசிங்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்