என்எல்சி நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக - 232 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை :

By செய்திப்பிரிவு

என்எல்சி நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 232 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து நிறுவன வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

என்எல்சி நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டு (2021-22), முதல் காலாண்டுக்கான செயல்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்ற இயக்குநர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி, அந்நிறுவனம் தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து 30.06.2021 அன்று நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ 3221 கோடியே 79 லட்சத்தை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2020-21-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய வருவாயான ரூ. 3065 கோடியே 80 லட்சத்தை விட 5.09 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகர லாபத்தைப் பொறுத் தவரையில், இந்நிறுவனம் தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து ரூ. 357 கோடியே 59 லட்சத்தை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2020-21-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபமான ரூ. 343 கோடியே 48 லட்சத்தை விட 4.11 சதவீதம் அதிகமாகும். என்எல்சி நிறுவனத்தால் மட்டும், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஈட்டப்பட்டுள்ள மொத்த வருவாய் ரூ. 2,504 கோடியே 45 லட்சமாகும். இது, முந்தைய 2020- 21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய மொத்த வருவாயான ரூ. 2,386 கோடியே 86 லட்சத்தை விட 4.93 சதவீதம் அதிகமாகும். நிகர லாபத்தைப் பொறுத்தவரையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் மட்டும் ரூ. 267 கோடியே 22 லட்சத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2020-21-ம் நிதி யாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ. 292 கோடியே 54 லட்சமாகும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் என்எல்சி நிறுவனம் 10 லட்சத்து 17 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரியை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய 2020-21-ம் ஆண்டின்

முதல் காலாண்டின் விற்பனை செய்த அளவான 4 லட்சத்து 46 ஆயிரம் டன்னைவிட 128.03 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 663 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மின் சக்தியையும், துணை நிறுவனத்துடன் இணைந்து 796 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மின் சக்தியையும் உற்பத்தி செய்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் உற்பத்தி செய்த அளவான 569 கோடியே 86 லட்சம் யூனிட் மற்றும் 701 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரம் யூனிட்டை விட, இது முறையே 16.50 சதவிகிதம் மற்றும் 13.61 சதவீதம் அதிகமாகும்.

புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரையில், இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 57 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் பசுமை மின் சக்தியை, உற்பத்தி செய்துள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் உற்பத்தி செய்த அளவான 53 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் யூனிட்டை விட, இது 7.88 சதவீதம் அதிகமாகும். இந்த தகவலை என்எல்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை தெரி வித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்