மாவட்டங்களில் தேசியக் கொடி ஏற்றி வைத்த ஆட்சியர்கள் : சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறை ஊழியர்களுக்கு பதக்கங்கள்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆட்சியர் ச.விசாகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து சிறப்பாகப் பணிபுரிந்த அரசு ஊழியர்கள், போலீஸார், தீயணைப்புத் துறையினருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், டி.ஐ.ஜி., விஜயகுமாரி, காவல் கண்காணிப்பாளர் னிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் சுகாதாரம், காவல், வருவாய் உட்பட 21 துறைகளைச் சேர்ந்த 463 அலுவலர் களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், காவல் கண்காணிப்பாளர் மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேனி

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் க.வீ.முரளிதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த 120 பேருக்கும், காவல் துறையைச் சேர்ந்த 21 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். வட்டாட்சியர்கள் மூலம் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி பிரவின்உமேஷ்டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த விழாவில் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நிகழ்ச்சியில் ரூ.9.10 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கினார். அதையடுத்து சிறப்பாகப் பணியாற்றியதற்காக கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார், ராமநாதபுரம் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.அல்லி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜெய்சிங், லயோலா இக்னேஷியஸ், தனிப் பிரிவு ஆய்வாளர் சரவணபாண்டி சேதுராயர் உட்பட 180 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றுகளை ஆட்சியர் வழங்கினார்.

மேலும் தேசிய, தென்மண்டல அளவிலான விளையாட்டுகளில் பதக்கம் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்மிளா (குண்டு எறிதல்), சரண் (தடகளம் 800 மீ.), மதுமிதா (வட்டு எறிதல்), ஷாலினி, ரவிசனா (கால்பந்து), ஐஸ்வர்யா (வட்டு எறிதல்) ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரத்தில் தியாகிகள் எம்.பாண்டியராஜ், மு.சேது, என்.கோமதி, எஸ்.தேனம்மாள் ஆகிய 4 பேரின் வீடுகளுக்குச் சென்று கோட்டாட்சியர், வட்டாட்சியர் கவுரவித்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாக மைதானத்தில் நடை பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர், எஸ்பி செந்தில்குமாருடன் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.7.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளின் 465 ஊழியர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் சிலை, குயிலி நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

சிவகங்கை காசி விசுவநாதர் கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஆட்சியர் வேட்டி, சேலை வழங்கி மதிய உணவு அளித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வீரபத்திரன், மருத்துவக் கல்லூரி டீன் ரேவதிபாலன், அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்