நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்டா மாவட்டங்களில் நேற்று ஆட்சியர்கள் தேசியக் கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தினர்.
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக்கொண்டார். கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 133 அலுவலர்களுக்கு பதக்கம், நினைவுப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 99 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், எஸ்.பி ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, எம்எல்ஏ நாகை மாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில், ஆட்சியர் ரா.லலிதா தேசியக் கொடியேற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 91 மருத்துவர்கள் உட்பட 165 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில் 70 பயனாளிகளுக்கு ரூ.4.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், எஸ்.பி ஜி.சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, மூவர்ண பலூன்கள், புறாக்களை பறக்கவிட்டார். நிகழ்ச்சியில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 209 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், தன் உண்டியல் சேமிப்பிலிருந்து முதல் நபராக கரோனா நிதியுதவி வழங்கிய சிறுமி சாம்பவி, சிறப்பாக பணியாற்றியதால் குருவாடிப்பட்டி மக்களால் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட வல்லம்புதூர் விஏஓ செந்தில்குமார், தஞ்சாவூர் கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, தொடர்ந்து 14 வாரங்களாக இசைநிகழ்ச்சியை இலவசமாக நடத்திய இசைக்கலைஞர் பிராங்கிளின் உள்ளிட்டோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில், தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார், மாவட்ட எஸ்.பி ரவளிப்பிரியா காந்தபுனேனி, கூடுதல் ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியேற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார். பயனாளிகளுக்கு ரூ.1.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில், எஸ்.பி விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) புண்ணியகோட்டி, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காரைக்கால் கடற்கரை சாலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தேசியக் கொடியேற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், தியாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றோரை கவுரவித்து, பரிசுகளை வழங்கினார். பள்ளி மாணவர்கள், கலை பண்பாட்டுத் துறையினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago