அகவிலைப்படி உயர்வு நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : முதல்வருக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் க.அருள் தலைமை வகித்தார். செயலாளர் சுப.குழந்தைசாமி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் என்.ரங்கராஜன், துணைத் தலைவர் க.கணேசன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஈவேரா, நாகை மாவட்டச் செயலாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் இல்லை. அதேநேரம், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேநேரத்தில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு, ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும், அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு ஆகியவற்றை வரவேற்கிறோம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டார பொதுக்குழுக் கூட்டம் பவித்திரமாணிக்கத்தில் நேற்று நடைபெற்றது. வட்டாரத் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். செயலாளர்(பொ) அகஸ்டின் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஆர்.ஈவேரா பேசினார்.

கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறக்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஊக்க ஊதிய உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், வட்டாரப் பொருளாளர் நக்கீரன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்