திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார்,சேரமான்பெருமான் திருக்கயிலாயம் செல்லும் வைபவம் மற்றும் 63 நாயன்மார் உள்வீதி உலா நடைபெற்றது.
சுந்தரமூர்த்தி நாயனார் பூமியில் அவதரிக்குமுன், கைலாயத்தில் சிவரூபத்தில் இருக்கிறார். அங்கே, அவர் பார்வதி தேவியின் தோழியர் இருவர் மீது மையல் கொள்ள , சிவபெருமான் அவரை பூமியில் பிறந்து அந்த இரு பெண்களான பரவை நாச்சியார், சங்கிலி ஆகியோரை மணந்து வாழ அனுப்பிவிடுகிறார். அவ்வாறு பூமியில் பிறந்தபோது, அவருக்கு சேரமான் பெருமான் நண்பராகிறார். சுந்தரர் மீண்டும் கைலாயம் செல்லும் காலம் வந்தபோது, தேவர்களின் தலைவனான இந்திரனின் யானையான ஐராவதம் (வெள்ளை யானை) யானையை அனுப்பி அதன் மீதேறி சுந்தரரையும், அவரின் தோழரான சேரமான் பெருமானையும் கைலாயம் வரச்செய்ததாக ஐதீகம். இக்காட்சி நெல்லையப்பர் கோயில் நாதமணி மண்டபத்தின் தென்புற சுவரில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, சுந்தரமூர்த்தி நாயனார்,சேரமான்பெருமான் ஐக்கியமாக கயிலாயம் செல்லும் வைபவமாக நெல்லையப்பர் கோயிலில் இன்று நடைபெற்றது. மேலும் இதையொட்டி திருக்கோயில் பிரகாரத்துக்குள் 63 நாயன்மார் வீதியுலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago